Monday, November 15, 2010

முக்தி தரும்....


தமிழ் மன்றம் வலைத்தளத்தில் படம் பார்த்து கவிதை சொல்லும் திரியில் என்னை எழுத தூண்டிய இந்த படத்தையும் அதற்கு நான் வல்லம் தமிழ் என்ற பெயரில் எழுதிய கவிதையையும் இங்கே உங்கள் பார்வைக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

குடையின்றி நனைவது அம்மா

குடைக்குள்ளும் நனைவது பையன்
பாச மழை!


அந்த விரிந்த குடையின்
வெளிர்ந்த வண்ணமே
அன்பின் வண்ணம்!
அந்த நனைந்த தாயின்
மெலிந்த தேகமே
தாய்மையின் சின்னம்!

இப்படி
மகனுக்கு குடைதந்து
மழையில் நனைந்து வரும்
தாய்களின் பாதங்களை
தரிசிக்கவே மண்ணுக்கு வருகிறது
மழைத்துளி!

சடுதியில் காட்சி மாறி
சம்பளம் வாங்கி பையன்
தூக்குவான் கரன்சிக்கட்டு!
ஞாபகம் வருமோ அன்று
தான் தூக்கினால் வலிக்குமென்று
தாய் தூக்கிய புத்தகக்கட்டு!

அம்மா...
கருணை ததும்பும் உன்
காலைக் கழுவிய
நீரைக்குடித்து
வளர்ந்த மரமே
போதிமரம்!
பாசம் கமழும் உன்
சுவாசம் கலந்த
காற்றை இழுத்து
மூச்சையடக்க
முக்தி வரும்!

Wednesday, October 27, 2010

வல்லம் தமிழ் சங்க முதல் நிகழ்வுவல்லம் தமிழ் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கு கொண்ட மாபெரும் பேச்சுப் போட்டி கடந்த 24.10.2010 அன்று வல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள்,9 முதல் 10 ஆம் வகுப்பு ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என தனித் தனி பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.நல்லாசிரியர் யோகனாதன் ,ஆசிரியர் தேவசகாயம்,முனைவர் சாந்தி,முனைவர் கவிதாசன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுடன் நூலக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்ற சங்கத்தின் நோக்கத்தை நோக்கிய பயணத்தில் முதல் மற்றும் குறீப்பிடத் தக்க வெற்றியாக இது பதிவு செய்யப்படுகிறது.

Tuesday, September 28, 2010

அயோத்தி தீர்ப்பும்,தேவையற்ற அச்சமும்


அயோத்தி தீர்ப்பை ஒரு அச்சத்துடன் எல்லோரும் எதிர் நோக்கியுள்ள நிமிடங்களில் உங்களை சந்திக்கிறேன்-ஒரு இனம் புரியாத வெட்கத்துடனும் தவிர்க்க இயலாத உறுத்தலுடனும்-ஒரு மத சார்பற்ற நாட்டின் 63 வருட ஜன நாயகம் இதை தான் நமக்கு கற்று கொடுத்துள்ளதா?

Sunday, June 27, 2010

வல்லம் தமிழ் சங்கம்

அன்புடையீர் ! வணக்கம் !
மிக நீண்ட நாட்கள் யோசித்து ,மிக நல்ல நண்பர்களின் துணையுடன் "வல்லம் தமிழ் சங்கம் "என்ற அமைப்பு தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் துவங்கப் பட்டுள்ளது . நல்ல படைப்பாளிகளை இனம் கண்டுகொள்ளவும் ,ஆர்வப் படுத்தவும் , முடிந்தால் உருவாக்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .தமிழ் ஆர்வலர்கள் ,இளம் படைப்பாளிகள் ,உண்மையான தமிழ் உணர்வுடன் உள்ள தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் வாருங்கள் ! வல்லம் தமிழ் சங்கம் உங்களுக்காக காத்திருக்கிறது ....தொடர்பிற்கு :வல்லம் தமிழ் சங்கம் ஜி டி .எம் .ஹெல்த் கேர் சென்டர் ,பேருந்து நிலையம் ,வல்லம்,தஞ்சாவூர் மாவட்டம் .

Tuesday, June 22, 2010

கனவுத் தேடல்
நிஜமே நிஜமாய் நிஜத்தை தாக்கும்....

கனவும் கனவில் கனவாய் போகும்....

தேடலை தேட தேடலே வாழ்வாய்...

முடியும் முடியா பாதையாய் முடியும்.

Tuesday, February 9, 2010

பசிக்குமா ??

நல்ல வேளை இந்த வலைப்பதிவை நான் மட்டுமாவது நினைவில் வைத்துள்ளேன் . எழுத எவ்வளவோ இருந்தும் எழுத முடிவதில்லை ,வாழ்க்கையை போலவே -தூக்கம் வராத ராத்திரிகள் தொலைந்து போயின -இப்போதெல்லாம் தூங்க முடியாத ராத்திரிகளே தொடர்கின்றன !சோற்றுக்கு அலையும் வேலையால் அழிந்தது சுந்தர பொழுதுகள் !நான் சுகித்திருந்த கவிதை பெண்ணை சம்பள கவர்கள் மறைத்து கொண்டன அல்லது கொன்றன !பிழைத்துக் கொண்டது நானும் என் வயிறும் , பிறிதொரு நாள் வரும் ...அன்றேனும் மனதின் பசியடக்கும் மாயம் நிகழுமா ??