Monday, November 15, 2010

முக்தி தரும்....


தமிழ் மன்றம் வலைத்தளத்தில் படம் பார்த்து கவிதை சொல்லும் திரியில் என்னை எழுத தூண்டிய இந்த படத்தையும் அதற்கு நான் வல்லம் தமிழ் என்ற பெயரில் எழுதிய கவிதையையும் இங்கே உங்கள் பார்வைக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

குடையின்றி நனைவது அம்மா

குடைக்குள்ளும் நனைவது பையன்
பாச மழை!


அந்த விரிந்த குடையின்
வெளிர்ந்த வண்ணமே
அன்பின் வண்ணம்!
அந்த நனைந்த தாயின்
மெலிந்த தேகமே
தாய்மையின் சின்னம்!

இப்படி
மகனுக்கு குடைதந்து
மழையில் நனைந்து வரும்
தாய்களின் பாதங்களை
தரிசிக்கவே மண்ணுக்கு வருகிறது
மழைத்துளி!

சடுதியில் காட்சி மாறி
சம்பளம் வாங்கி பையன்
தூக்குவான் கரன்சிக்கட்டு!
ஞாபகம் வருமோ அன்று
தான் தூக்கினால் வலிக்குமென்று
தாய் தூக்கிய புத்தகக்கட்டு!

அம்மா...
கருணை ததும்பும் உன்
காலைக் கழுவிய
நீரைக்குடித்து
வளர்ந்த மரமே
போதிமரம்!
பாசம் கமழும் உன்
சுவாசம் கலந்த
காற்றை இழுத்து
மூச்சையடக்க
முக்தி வரும்!