Thursday, January 20, 2011

மௌனம் என்ன மொழி?

அனைத்து நதிகளிலும்
அன்பே பிரவகிப்பதால்
மதங்களைக் கடப்பதைக் காட்டிலும்
மதங்களில் கரைவதன் மூலம்
மனிதத்தில் சங்கமிப்போம்
மகா சமுத்திரமாய் ஆர்ப்பரிப்போம் !


உணர்வுகளை சொல்லவல்ல
ஊடகமே மொழி !
மனங்களை இணைப்பதொன்றே
மகத்தான அதன் பணி !
ஊடகத்தின் பெயரால்-நமக்குள்
கோடுகிழிக்க வருவோரிடத்து
மௌனமாயிருங்கள்..-கேளுங்கள்
மௌனம் என்ன மொழி ?

வியர்வையாய் சிந்த வேதனைப்பட்டால்
கட்டாயம் ஒருநாளதை கண்ணீராய் சிந்தவேண்டிவரும்
என்பதாலேயே
வியர்வைக்கும் கண்ணீருக்கும் ஒரே சுவை..!
ஆகவே அருமை நண்பர்களே..
உழைத்தவன் கைகளில் உரிமைகள் தருவோம்
அவரை ஏய்த்து
பிழைப்பவர் செயலை பிழையென்றே கொல்வோம்..!

தீண்டிடில் தின்றிடும் தீயது சாதா தீ!
தீண்டாமை தின்றிடும் தீயெது சாதி!
தீண்டியும், தீண்டாதும்
திகுதிகுவென எரியும் தீ அது அறிவுத் தீ!
அக்கினிக் குஞ்சில் உயர்வெது தாழ்வெது?
அறிவுத்தீயில் முதலெது முடிவெது?
அறிவுத்தீயால் அழிப்போம் சாதியை..அது கொடியது..!

கனவுச்சுடரால் சமைப்போம் வழியை
அறிவுச்சிறகால் அளப்போம் வெளியை
பறப்போம் கலப்போம்
பள்ளம் மேடற்ற சமூகம் படைப்போம்..!

மத மொழியின வர்க்கபேதம் தகர்த்து
அனைவரும் சமமெனும்
ஆனந்த சமூகம் படைப்பது
மனிதரனைவரின் பொறுப்பு..!
ஏனெனில்..
சக மனிதரனைவரும்
சகோதரனே என்பதற்கு
சாட்சியாய் கிடக்கிறது
உனக்குள்ளே ஊறித் ததும்பி நிற்கும்
உதிரச் சிவப்பு..!
Wednesday, January 12, 2011

குழந்தைகள்

விடிகாலை! இளங்குருத்து!
முதல் தூறல்! புது நாத்து!
கீறிய நிலம்! வீரிய விதை!
எழுதாக் காகிதம் ! உயிருள்ள ஒவியம் !

பசிக்கையில் கிடைக்கும் பல்சுவை விருந்து !
பசியால் விளைந்த பசிநீக்கும் மருந்து !

இன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்
நம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜம் !

அனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம் !
அவரவர் கடவுளின் அற்புத தரிசனம் !

இவைகள் போலவும் இன்னும் கூடவும்
குழந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்
ஆனால்...
குழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது
ஏனெனில்.....

கவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...?

Tuesday, January 11, 2011

மரமும் நானும்...

நீள வளர்ந்தால்
பாதை மறையுமென
நெடுஞ்சாலைதுறையினர்
நீக்கி எறிந்தனர்...

பக்கம் படர
சுற்றுச்சுவர் பாழாகுமென
வீட்டு உரிமையாளர்
வெட்டித்தள்ளினார்...

தாழ படர
கீழே வடைதட்டி விற்பவர்
கைகள் இடிக்குமென
கழித்து கட்டினார்...

அனைவரையும் அனுசரித்து
எவரையும் பாதிக்காமல்
எப்பக்கம் படர்வதென
புரியாத பதைபதைப்பில்
சாலையோர மரமும்
மரத்தடியில் நானும்...

Monday, January 10, 2011

மகாநதி...

புரிந்தவைகளை தீர்மானமாக மறுக்கும்...
மறுப்புகளிலிருந்தே மறுபடியும் புரியவைக்கும்
உயிரும் உணர்வுமற்று
அசைவுகளை உண்டாக்கும்..
அசைவுகளை அடையாளம் காட்டியே
உயிர்களை உருவாக்கும்...

சைகைகளின் ஒலிவடிவாய்
மொழிகளை பிரசவிக்கும்..
மொழிகளின் சப்தத்தினால்
நிசப்தத்தின் பெருமைபேசும்...

உயிரற்றதொரு நாள் வரும் என்ற
உணர்வினூடே
வாழ்தலின் சுகம் காட்டும்..

நாளாய் கிழமையாய்
நாட்காட்டியில் பிடித்து விட்டோமென்று
கணக்கில் திருப்திபடுவோரை
கண்டு நகை காட்டும்...

எப்போதிலிருந்து எப்பொதுவரையென்ற
விடைதெரியா கதைசொல்லி
கணக்கற்ற தன் கரங்கள் கொட்டி சிரிக்கும்...

பூமிக்கும் வானுக்குமிடையே
காற்றாய் நீராய் நெருப்பாய்
வெவ்வேறாய் காட்சி தரும்..
பின்னெல்லாம் கலந்து
யாதுமாகி நிற்கும்...
சிலநேரம்
எதுவுமற்றும் தோணும்...

Sunday, January 9, 2011

கட்சிகள் பொங்கினால்...

தொண்டர்கள் பொங்கிட வாழ்த்துகள் வழங்கிடும் கட்சிகள் பொங்கினால் எப்படி இருக்கும்..?ச்சும்மா ஒரு ஜாலி கற்பனை ...

அடுக்கு மொழி அடுப்பில்
ஒரு ரூபாய் அரிசியுடன்
வார்த்தைஜால வெல்லம் கலந்து
இலவச நெய் ஊற்றி
`கை`பார்த்து இறக்கினால்
தி மு க பொங்கல்

கணக்கு கேட்டு கனன்ற அடுப்பில்
எம் ஜி ஆர் பானை ஏற்றி
அம்மா களைந்த அரிசியுடன்
அதிரடி வெல்லம் கொட்டி
கொஞ்சம்
ஆன்மிக ஜோதிட நெய் கலந்தால்
ஆச்சு ...அ தி மு க பொங்கல்

கதிர் அறுவாள் கொண்டறுத்த
வெண்மணி அரிசியுடன்
கைசுத்தி வென்றெடுத்த
வியர்வையை வெல்லமாக்கி
நெய்யற்று நீரற்று வறண்ட
போராட்ட அடுப்பில் எழும்
சிவந்த தழல் மேலே
பொங்கி பொங்கி எழுந்தால் அது
காம்ரேட்களின் கம்யூனிஸ்ட் பொங்கல்

நேரு குடும்ப அடுப்பில்
காந்தி பெயரிட்ட பானையில்
மதசார்பற்ற நெல் குத்தியெடுத்த
மைனாரிட்டி அரிசியுடன்
கூட்டணி வெல்லம் கொட்டி
கோஷ்டி மார்க் நெய் ஊற்ற
எமர்ஜென்சி மறந்து பொங்கும்
காங்கிரஸ் பொங்கல்

அகிம்சை அரிசியுடன்
சத்திய சர்க்கரை கலந்து
எளிமை நெய் ஊற்றி
இறக்கினால்
பாவ்ம் யாரும் சாப்பிட விரும்பாத
காந்தி பொங்கல்