Tuesday, November 29, 2011

ஆங்கிலம் தெரியாதென்பது என்ன அவ்வளவு கேவலமா?

சமீபத்தில் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்விற்கு பேச அழைத்திருந்தார்கள்.நிகழ்ச்சிக்கு முதல் நாள் கூப்பிட்ட நண்பர் தொலைபேசியில் அழைத்து `தமிழ் அங்கே ஆங்கிலத்தில் தான் பேசணுமாம் ...` என்றார். நான் மறு நொடி சொன்னேன் `மன்னிக்கவும் எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது`

அவ்ர் ஆச்சரியமாக கேட்டார் `ஆங்கிலத்தில் பேச வராதா..?அதை இவ்வளவு பெருமையாக சொல்லி கொள்கிறீர்கள்..கொஞ்சம் கூச்சமாக இல்லையா?` நான் அமைதியாக சொன்னேன் `இதில் என்ன கூச்சப்பட இருக்கிறது? எந்த ஆங்கிலேயனாவது தமிழ் தெரியவில்லை என்று கூச்சப்படுகிறானா...?

அவர் அலுத்துக்கொண்டு சொன்னார் ` ஆமாம் உங்களை மாதிரி கிறுக்கு பயலுக தான் இன்னும் தமிழை கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்..எந்தனை தமிழ் வாத்தியார்கள் தங்கள் பிள்ளைகளை

தமிழ் வழியில் படிக்க வைத்திருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?`

நான் சொன்னேன் `தமிழ் வாத்தியார் வேலைக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம் என்று சொல்ல சொல்லுங்கள்..அடுத்த வருடம் தமிழ் படிக்க நுழைவுத்தேர்வு நடத்தி தான் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அதைப்போல மருத்துவம்,பொறியியல்,சட்டம் ஆகிய உயர் தொழில் படிப்புகளை தமிழில் நடத்த புத்தகமும்,அரசாணையும் வெளியிட சொல்லுங்கள்...இதையெல்லாம் செய்ய வக்கற்ற தமிழின தளபதிகள் தங்கள் வீட்டு பிளளைகளை ஆங்கில வழியில் படிக்க அமெரிக்காவிற்கு அனுப்பி விட்டு ஏமாந்த அப்பாவி தமிழனுக்கு தமிழில் படிக்க அறைகூவல் விடுப்பார்கள்`

மேலும் சொன்னேன் `ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி என்றும் அந்த மொழி தெரியாதவனை முட்டாள் என்றும் `சிவப்பாய் இருப்பவனெல்லாம் நல்லவன்` என்கிற காமெடியைப் போல் உளறித் திரிகிறார்கள். உண்மையில் ஆங்கிலம் தெரிவதென்பது ஒரு மொழியறிவு மட்டுமே..அது ஒரு மனிதனின் மேதமைத்தன்மையை நிர்ணயிக்கும் அல்லது அளக்கும் காரணி அல்ல..`

`இன்னும் சில பேர் பிதற்றுகிறார்கள் ஆங்கிலம் படித்தால் உடனே வேலை கிடைக்குமென்று...அப்படியென்றால் அமெரிக்காவில் வேலையில்லாத இளைஞர்களே இல்லையா..?

விவாதம் அனல் பறக்க தொடர்ந்தது....முடிந்தால் அதை இன்னுமொரு நாளில் பதிவு செய்கிறேன்...