Friday, June 27, 2014

எல்லா வீட்டிலும்
செல்லம்மாக்கள் இருக்கிறார்கள்
பாரதி மட்டும்
ஏதாவது ஒரு வீட்டில்
எப்போதாவது தான்
தென்படுகிறான்...

Monday, June 23, 2014

அவன் நேராத் தான் நடக்குறான் ...
சற்றுமுன் பார்த்தேன் 
சாலையில் அவனை
பல வண்ணங்களில் அகலக்கரை போட்ட
பழுப்பேறிய லுங்கியும்
ஒருகாலத்தில் நீலமாயிருந்த 
கசங்கிய சட்டையும் உடுத்தி
முன்னும் பின்னும் அலைந்தபடி
 நடந்துக் கொண்டிருந்தான்...

பலநாட்கள் சவரமறியா முகம் தான்
எனினும்
அதன் சுவடே தெரியாமல் 
ஒரு 
மோகனப்புன்னகை
வெற்றிக்களையோடு அவன் முகத்தை 
வெளிச்சமாக்கியிருந்தது...

எதன்மீதும் கோபமற்று
எதையும் எதிர்கொள்ளும் திடத்துடன்
தவப்பலனாய் சித்திக்கும்
தெய்வீக சிரிப்பு அது...

அது சர்வநிச்சயமாய்
இந்த லோகத்து சிரிப்பல்ல...
முற்றிலும் வேறு உலகின் நிலையது..

அந்த சிரிப்பின் கவர்ச்சி
என்னையும் அந்த லோகத்திற்கு அழைத்தது...
என்ன...
`குடிச்சிட்டு தள்ளாடுறான் பாரு`
என்று
இந்த லோகத்து மனிதர்கள் சிரிப்பார்கள்
அர்த்தமற்று...