Friday, December 5, 2014

வெளிச்சம் விற்பவள்...


விரித்து வைத்த 
வெள்ளை சிமெண்ட் சாக்கில் 
மண் அகல் விளக்குகள்
குவித்து வைத்து
சாயம்போன சேலையுடுத்தி
சாலையோரம் நின்றவளை கேட்டேன்
`எப்போதும் போகிற 
சீவல் கம்பெனியை விடுத்து
எதற்கு நிற்கிறாய் இன்று
விளக்கு விற்றுக்கொண்டு?
லாபம் அதிகமோ????`

சிரித்து விட்டு சொன்னாள்
`இத்தனை விளக்கும் விற்றால்கூட 
சீவல் கம்பெனி வேலையின் 
ஒருநாள் ஊதிய லாபம் வராது
இருப்பினும் 
எல்லா வீட்டிலும் எரிகிற விளக்கு
எங்கள் விளக்கு தான் என்கிற மகிழ்வை
அந்த காசு தராது...`

அதிர்ந்து நின்றேன்
அப்புறமும் சொன்னாள்
`இன்றைக்கும் நான் வேலைக்கு போனால்
எதில் ஏற்றுவீர்கள் உங்கள் வீட்டு தீபத்தை...???`

எனக்கென்னவோ அவள்விற்ற 
எல்லா விளக்கின் நுனித்திரியிலும் 
அந்த கேள்வியின் கருணையே
வெளிச்சமாய் துலங்கிடுமென தோன்றியது!