Wednesday, January 12, 2011

குழந்தைகள்

விடிகாலை! இளங்குருத்து!
முதல் தூறல்! புது நாத்து!
கீறிய நிலம்! வீரிய விதை!
எழுதாக் காகிதம் ! உயிருள்ள ஒவியம் !

பசிக்கையில் கிடைக்கும் பல்சுவை விருந்து !
பசியால் விளைந்த பசிநீக்கும் மருந்து !

இன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்
நம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜம் !

அனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம் !
அவரவர் கடவுளின் அற்புத தரிசனம் !

இவைகள் போலவும் இன்னும் கூடவும்
குழந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்
ஆனால்...
குழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது
ஏனெனில்.....

கவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...?

Tuesday, January 11, 2011

மரமும் நானும்...

நீள வளர்ந்தால்
பாதை மறையுமென
நெடுஞ்சாலைதுறையினர்
நீக்கி எறிந்தனர்...

பக்கம் படர
சுற்றுச்சுவர் பாழாகுமென
வீட்டு உரிமையாளர்
வெட்டித்தள்ளினார்...

தாழ படர
கீழே வடைதட்டி விற்பவர்
கைகள் இடிக்குமென
கழித்து கட்டினார்...

அனைவரையும் அனுசரித்து
எவரையும் பாதிக்காமல்
எப்பக்கம் படர்வதென
புரியாத பதைபதைப்பில்
சாலையோர மரமும்
மரத்தடியில் நானும்...

Monday, January 10, 2011

மகாநதி...

புரிந்தவைகளை தீர்மானமாக மறுக்கும்...
மறுப்புகளிலிருந்தே மறுபடியும் புரியவைக்கும்
உயிரும் உணர்வுமற்று
அசைவுகளை உண்டாக்கும்..
அசைவுகளை அடையாளம் காட்டியே
உயிர்களை உருவாக்கும்...

சைகைகளின் ஒலிவடிவாய்
மொழிகளை பிரசவிக்கும்..
மொழிகளின் சப்தத்தினால்
நிசப்தத்தின் பெருமைபேசும்...

உயிரற்றதொரு நாள் வரும் என்ற
உணர்வினூடே
வாழ்தலின் சுகம் காட்டும்..

நாளாய் கிழமையாய்
நாட்காட்டியில் பிடித்து விட்டோமென்று
கணக்கில் திருப்திபடுவோரை
கண்டு நகை காட்டும்...

எப்போதிலிருந்து எப்பொதுவரையென்ற
விடைதெரியா கதைசொல்லி
கணக்கற்ற தன் கரங்கள் கொட்டி சிரிக்கும்...

பூமிக்கும் வானுக்குமிடையே
காற்றாய் நீராய் நெருப்பாய்
வெவ்வேறாய் காட்சி தரும்..
பின்னெல்லாம் கலந்து
யாதுமாகி நிற்கும்...
சிலநேரம்
எதுவுமற்றும் தோணும்...

Sunday, January 9, 2011

கட்சிகள் பொங்கினால்...

தொண்டர்கள் பொங்கிட வாழ்த்துகள் வழங்கிடும் கட்சிகள் பொங்கினால் எப்படி இருக்கும்..?ச்சும்மா ஒரு ஜாலி கற்பனை ...

அடுக்கு மொழி அடுப்பில்
ஒரு ரூபாய் அரிசியுடன்
வார்த்தைஜால வெல்லம் கலந்து
இலவச நெய் ஊற்றி
`கை`பார்த்து இறக்கினால்
தி மு க பொங்கல்

கணக்கு கேட்டு கனன்ற அடுப்பில்
எம் ஜி ஆர் பானை ஏற்றி
அம்மா களைந்த அரிசியுடன்
அதிரடி வெல்லம் கொட்டி
கொஞ்சம்
ஆன்மிக ஜோதிட நெய் கலந்தால்
ஆச்சு ...அ தி மு க பொங்கல்

கதிர் அறுவாள் கொண்டறுத்த
வெண்மணி அரிசியுடன்
கைசுத்தி வென்றெடுத்த
வியர்வையை வெல்லமாக்கி
நெய்யற்று நீரற்று வறண்ட
போராட்ட அடுப்பில் எழும்
சிவந்த தழல் மேலே
பொங்கி பொங்கி எழுந்தால் அது
காம்ரேட்களின் கம்யூனிஸ்ட் பொங்கல்

நேரு குடும்ப அடுப்பில்
காந்தி பெயரிட்ட பானையில்
மதசார்பற்ற நெல் குத்தியெடுத்த
மைனாரிட்டி அரிசியுடன்
கூட்டணி வெல்லம் கொட்டி
கோஷ்டி மார்க் நெய் ஊற்ற
எமர்ஜென்சி மறந்து பொங்கும்
காங்கிரஸ் பொங்கல்

அகிம்சை அரிசியுடன்
சத்திய சர்க்கரை கலந்து
எளிமை நெய் ஊற்றி
இறக்கினால்
பாவ்ம் யாரும் சாப்பிட விரும்பாத
காந்தி பொங்கல்


Monday, November 15, 2010

முக்தி தரும்....


தமிழ் மன்றம் வலைத்தளத்தில் படம் பார்த்து கவிதை சொல்லும் திரியில் என்னை எழுத தூண்டிய இந்த படத்தையும் அதற்கு நான் வல்லம் தமிழ் என்ற பெயரில் எழுதிய கவிதையையும் இங்கே உங்கள் பார்வைக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

குடையின்றி நனைவது அம்மா

குடைக்குள்ளும் நனைவது பையன்
பாச மழை!


அந்த விரிந்த குடையின்
வெளிர்ந்த வண்ணமே
அன்பின் வண்ணம்!
அந்த நனைந்த தாயின்
மெலிந்த தேகமே
தாய்மையின் சின்னம்!

இப்படி
மகனுக்கு குடைதந்து
மழையில் நனைந்து வரும்
தாய்களின் பாதங்களை
தரிசிக்கவே மண்ணுக்கு வருகிறது
மழைத்துளி!

சடுதியில் காட்சி மாறி
சம்பளம் வாங்கி பையன்
தூக்குவான் கரன்சிக்கட்டு!
ஞாபகம் வருமோ அன்று
தான் தூக்கினால் வலிக்குமென்று
தாய் தூக்கிய புத்தகக்கட்டு!

அம்மா...
கருணை ததும்பும் உன்
காலைக் கழுவிய
நீரைக்குடித்து
வளர்ந்த மரமே
போதிமரம்!
பாசம் கமழும் உன்
சுவாசம் கலந்த
காற்றை இழுத்து
மூச்சையடக்க
முக்தி வரும்!

Wednesday, October 27, 2010

வல்லம் தமிழ் சங்க முதல் நிகழ்வு



வல்லம் தமிழ் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கு கொண்ட மாபெரும் பேச்சுப் போட்டி கடந்த 24.10.2010 அன்று வல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள்,9 முதல் 10 ஆம் வகுப்பு ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என தனித் தனி பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.நல்லாசிரியர் யோகனாதன் ,ஆசிரியர் தேவசகாயம்,முனைவர் சாந்தி,முனைவர் கவிதாசன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுடன் நூலக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்ற சங்கத்தின் நோக்கத்தை நோக்கிய பயணத்தில் முதல் மற்றும் குறீப்பிடத் தக்க வெற்றியாக இது பதிவு செய்யப்படுகிறது.

Tuesday, September 28, 2010

அயோத்தி தீர்ப்பும்,தேவையற்ற அச்சமும்


அயோத்தி தீர்ப்பை ஒரு அச்சத்துடன் எல்லோரும் எதிர் நோக்கியுள்ள நிமிடங்களில் உங்களை சந்திக்கிறேன்-ஒரு இனம் புரியாத வெட்கத்துடனும் தவிர்க்க இயலாத உறுத்தலுடனும்-ஒரு மத சார்பற்ற நாட்டின் 63 வருட ஜன நாயகம் இதை தான் நமக்கு கற்று கொடுத்துள்ளதா?