Tuesday, August 23, 2016

நம்பிடில் பெய்யும்...

காலண்டரைப் பார்த்தேன்
‘மழை வரும்” என்றது
வானத்தைப் பார்த்தேன்

பிழையது என்றது
என்றாலும் எடுத்துச்சென்றேன் குடையொன்றை
ஆகா...
மண்ணில் பொழியாத மழை இன்று
மனதிற்குள் பொழிவதை அனுபவித்தேன்..

Monday, July 25, 2016

எனக்குள் ஒருத்தி...

அடியே...
அடிக்கடி தென்படுவாய் முன்பெல்லாம்..
ஆளையே பார்க்க முடிவதில்லையே இப்போது
என்னாச்சு என்றேன்...
அருகில் இருந்தேன்
அடிக்கடி வந்தேன் என்றாள்
விலகிப்போனாயோ இப்போதென்று
வேதனையுடன் வினவினேன்...
ஆமாம்..உன் விழிப்பார்வையிலிருந்து விலகி
மூச்சுக்காற்றுடன் கலந்து
உனக்குள் இருக்கிறேன்-உன்னையே
உற்றுப்பார் என்றாள்
கவிதைக் காதலி!

Friday, December 5, 2014

வெளிச்சம் விற்பவள்...


விரித்து வைத்த 
வெள்ளை சிமெண்ட் சாக்கில் 
மண் அகல் விளக்குகள்
குவித்து வைத்து
சாயம்போன சேலையுடுத்தி
சாலையோரம் நின்றவளை கேட்டேன்
`எப்போதும் போகிற 
சீவல் கம்பெனியை விடுத்து
எதற்கு நிற்கிறாய் இன்று
விளக்கு விற்றுக்கொண்டு?
லாபம் அதிகமோ????`

சிரித்து விட்டு சொன்னாள்
`இத்தனை விளக்கும் விற்றால்கூட 
சீவல் கம்பெனி வேலையின் 
ஒருநாள் ஊதிய லாபம் வராது
இருப்பினும் 
எல்லா வீட்டிலும் எரிகிற விளக்கு
எங்கள் விளக்கு தான் என்கிற மகிழ்வை
அந்த காசு தராது...`

அதிர்ந்து நின்றேன்
அப்புறமும் சொன்னாள்
`இன்றைக்கும் நான் வேலைக்கு போனால்
எதில் ஏற்றுவீர்கள் உங்கள் வீட்டு தீபத்தை...???`

எனக்கென்னவோ அவள்விற்ற 
எல்லா விளக்கின் நுனித்திரியிலும் 
அந்த கேள்வியின் கருணையே
வெளிச்சமாய் துலங்கிடுமென தோன்றியது!Friday, August 1, 2014பறக்கிற தங்க குதிரை வேணும்பா
என்று கேட்ட மகளை
வெறுப்புடன் பார்த்து விட்டு
வெளியில் வந்த தந்தை
மிதிக்கிற சைக்கிள் ஏறி
போகும் வழியில் அற்புதம் போல்
பறக்கிற தங்ககுதிரை பார்க்கநேர்ந்தால்
பாக்கெட்டை தடவிக்கொண்டே
`என்ன விலைங்க அது?`என்று
கேட்காமல் கடப்பதேயில்லை அவ்விடத்தை..

Tuesday, July 15, 2014

 

 

மீசை முளைத்த கிளி

பெரியகோயிலுக்கு போகும் பாதை
பெரிய மீசையுடன் அந்த கிழவர்...
திறந்து தின்னக்கொடுத்தால்
முழுநெல்மணியொன்றை கொறித்து
ஏதாவதொரு சீட்டைஎடுத்து
எறிந்து உள்செல்லும் மெலிந்த கிளி...
முரண்டு பிடிப்பதாய் தோன்றும் போதெல்லாம்
கிழவர் பெரியமீசையை நீவிவிடுகிறார்...
கிளி வெட்டப்பட்ட சிறகை ஒடுக்கியபடி
பின்னால் நடந்தே கூண்டிற்குள் செல்கிறது
பொழுதுபோகாமல் கிளியை உற்றுநோக்கி
பெரியமீசையை நீவிவிடும் போதும்கூட
அது அச்சத்தில் நடுநடுங்கி 
சிறிது எச்சம் கூட விடுகிறது...
வாகனநெரிசல் மிகுந்த பொழுதொன்றில்
காக்கிஉடுப்பணிந்த 
மீசை அரும்பிவரும் இளம்பையனொருவன்
லத்தியுடன் நெருங்கி வருகையில்
திடீரென்று...
கூண்டிற்குள் நடுங்கும் கிளிக்கு
பெரிய மீசை முளைக்கிறது.....!


Saturday, July 12, 2014

வாரம் ஒருமுறை சவரம் செய்கையில்
உன்னை பார்க்க ஆரம்பித்தேன்...
இன்றோ..
நாளுக்கொருமுறை
சவரம் செய்ய வேண்டியுள்ளது..
அடிப்போடி...
மயிர் வளர்ந்த அளவிற்கு கூட
உனக்கு என்மேல்
காதல் வளரவில்லை..

Tuesday, July 1, 2014ஏக்கம் வழியும் இரவுகள்
எனது நட்பே ...
எங்கிருக்கிறாய்
என்னுடன் நடந்து
எத்தனை தூரம் கடந்தாய்
பின் ஏன் இப்போதெல்லாம்
எங்கோ மறைந்துகொண்டு
என்னையே உற்றுநோக்குகிறாய் ...

உனது இடத்தை வேறு எவையோ
நிரப்புகின்றன ...
பூச்சாடியை குப்பைக் கூடையாய்
பயன்படுத்தும் பாபம் போல
நீ நிரம்பியிருந்த நிமிடங்களில்
வாழும் முறைகள் அடைத்து
வழிந்து ஓடுகிறது ... அருவருப்பாய் ...

கனவு நிரம்பியிருந்த என் காலப் பலூனில்
இப்போதெல்லாம்
நாட்காட்டி தாட்கள் மட்டுமே
ததும்பி வழிகின்றன ...!
வானம் வரை வளர்ந்திருந்த
வேட்கைத் தீ இப்போதெல்லாம்
அடுத்த வேளை சோறவிக்கும் அடுப்பிற்குள்
முணங்கித் திரிகிறது ...

வறுமை மறித்து நின்ற
வழியெல்லாம்
உன் கனவுத் திருக்கரத்தால்
கதவு திறக்க வைத்தாய் ...
பின் எப்படியோ நீ
பின்னடைந்து போனாய்
என்னை என் நடைமுறை சம்பிரதாயங்கள்
நெட்டித் தள்ளிப்போயின ...
திரும்பவும் சக்தியற்று
திசைகளின் வழியே திக்கித்திணறி
இதுமாதிரி இரவுகளில்
உன் அருகாமைக்காய் ஏங்கித்தவித்தபடி...
நடந்து கொண்டே இருக்கிறேன் ... நான் ...

என்னை எனக்கு மறந்து போகலாம்
என் நண்பா
என்னை உனக்கு ஞாபகமிருக்கிறதா ?
எனில்
என்னோடு வந்துவிடேன் ...
ஏனெனில்
என்னை எனக்கு தெரியாது
என்னை உனக்கு தெரியும் ....
தேடலில் தேம்பி பின் மனம் குலைந்து தேற்றி
விடியலின் வெளிச்ச மிகுதியில் மறந்து மனம் மாறி...
என்றேனும் இதுபோல தூக்கம் தொலைந்து
தேடும் நாளின் முன்பு நீயே வந்துவிடேன் ...
முன்புபோல ....