Sunday, October 23, 2011

சிவனே...!

ஊமையாய் படைத்தாய் என்னை

ஊறு செய் புலன்கள் செய்தாய்

தீமையாய் ஆசையுள் புகுந்தேன்-என் சிவனே

தீருமோ தீவினை யாவும் நன்றே..!

Tuesday, September 13, 2011

ஒரு துளி...

ஒரு துளி மை

ஒரு துளி மது

ஒரு துளி விஷம்

ஒரு துளி விந்து

ஒரு துளி வியர்வை

ஒரு துளி கண்ணீர்

ஒரு துளி உதிரம்

ஒரு துளி மழை

ஒரு துளியல்ல நான் என

உணர்த்திட

எத்துளியாவது இணைத்திடும் என்னை

உன்னுடன்...உலகுடன்...



Thursday, June 2, 2011

நல்லாட்சி நடந்தால் நல்லா பாராட்டுங்க...!


துறை அனுபவமுள்ள புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி,ஆரவாரமில்லாமல் நன்றி சொல்ல அறிவுறுத்தல்,அமைச்சர்களுக்கு நடத்திய பயிற்சிப் பட்டறை,துறைரீதியாக முடிக்கி விடப்பட்டுள்ள நிர்வாகம்,வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம்,மாவட்டந்தோறும் ஆடம்பர விழாக்கள் இன்றி இலவச அரிசி வினியோகம் இதோ இப்போது அரசியல் தலையீடற்ற நிர்வாகத்திற்கு அடையாளமாக அதிமுக வினர் மீதே அதிரடி நடவடிக்கை என அம்மாவின் ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. அம்மாவின் தலைமையில் ஒரு புதிய பொற்கால தமிழகம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

Friday, April 22, 2011

கிறுக்கு...

என்னைச் சுற்றி எல்லாமிருக்கிறது
எல்லாவற்றுகுள்ளும்
எனக்குகந்த நான் இருப்பதையே காண்கிறேன்...

உண்மையில்
எல்லாமென்பது இல்லை..
இல்லைகளுக்குள்ளும்
இருக்கும் என்னை
தேடியலையும் தேடுதலின்
மூச்சு வாங்குதலே
எல்லாமுமாக இருக்கிறது...

விரித்துவைத்த வெள்ளைதாளின் மீது
காற்றினால் அசைகிறது பேனா..
பின்
என் கையிலும் அசைகிறது-கற்பனையினால்...

காற்றினால் அசையும் அசைவை
ஏதாவதொரு கணத்தில்
என் கையிலும் கொண்டுவர முடிந்ததெனில்....
அற்புதம்...அற்புதம்...
நானும் காற்றும் கலந்தே எழுவோம்..
பாய்வோம்....

எழுத்துகளும், வரிகளுமற்ற
எங்கேயோ ஒளிந்துகொண்டுள்ளது
உண்மையான கவிதை...
அதை
வரிகளாலும் வார்த்தைகளாலும்
வருடி வருடி
அடையாளப்படுத்த விழையும்
அற்ப முயற்சிகளே
இதுவரை வெளிவந்த அனைத்து கவிதைகளும்..
இது உட்பட...

Saturday, March 12, 2011

மழை!

உயிர்களின் பசியடக்கும்
பயிர்களின் தாய்ப்பாலே..!

வானம் வழங்கிய அருட்கொடையே!
வறட்சி வென்றிடும் நீர்ப்படையே..!

எதிர்பார்ப்புகளற்ற காரியமாற்ற
எங்கள் உதாரணமே..!

மேகம் கிடுகிடுக்க மின்னல் ஒளிவிளக்காய்
வானம் விட்டு வரும் வசந்த பூ விதையே..!

ஆறுகள் பெருக்கெடுத்து
கடல் தோறும் கரை புரளும்
அலைகளின் பிறப்பிடமே..!

விதைகளை விருட்சமாக்கும்
விந்தை செய் விண்துளியே..!

கருணையின் வடிவமாய்
கசிந்துருகி வழியும் நீர்ச்சரமே..!

வறண்ட உலகைக் கண்டு
வானம் வடித்த கண்ணீரே..!

விதைத்து காத்திருக்கும்
விவசாயியின் வியர்வையை
அர்ச்சித்து தூவும்
அர்ச்சனை பூக்களே..!

நிலத்தில் நீ விழுந்தால்
நெல் முத்தாகிறாய்..
சிப்பிக்குள் நீ சிந்தினால்
நல்முத்தாகிறாய்..
முத்து முத்தாய் நீ முத்தமிட்டு தான்
மொத்த பூமியும் சுகப்படுகிறது..!

இயற்கைக்கு மாறாய் நீ
இந்த வருடம்
அதிகம் பொழிந்தாய் என
ஆனந்தப்பட்டோமே...
இப்போதல்லவா புரிகிறது-அது
ஆழிப்பேரலையால் அல்லல்படப்போகும்
மனிதகுலத்தை எண்ணி நீ
வடித கண்ணீர் என்று..!

நற்பெண்டிரின் நாக்குக்கு கட்டுப்படும் நாயகியே..!
வழங்கி வாழ்வளித்து
பொழியும் இடந்தோறும்
பொலிவை உண்டாக்கும்
தண்ணீர் குலத்தின் தலைமகளே..!

அழித்து அபகரித்து
ஆறாத்துயர் கூட்டும்
ஆழிப்பேரலையை-இனி
தண்ணீர் குலம் விட்டே
தள்ளி வைப்பாய் என் தாயே..!

பூமியின் அழுக்கினை
போக்கிட பொழிந்தாய்-இனி
மனிதரின் மன அழுக்கை
மாய்த்திட அவர்தம் மனதுக்குள் பொழி தாயே..!

அகிலத்தின் உயிர்ச்சத்தே..!
அனைத்துலகின் தத்துவமே..!
மகாசக்தி! தேவி ..!
மாரி உன்னை வணங்கி நின்றேன்
எங்கள் மனக்குறையை கேட்டருளாய்..

நீ வழங்கிய அருட்கொடையால்
நிறைந்துவரும் நதிப்போக்கை
நிறுத்தி அணை கண்டார்..
அந்த அணைகள் நிறைந்தழிந்து
தளும்பி சீற்றமுடன் தமிழகம்
தழுவும் வகையில் இனி
தாயே நீ பொழிக!
தமிழர் தாகம் தணித்திடுக..!

Tuesday, February 15, 2011

வலி....

  • நிலவெரியும் இரவு
  • நேர்மேலே நட்சத்திரம்
  • உற்றுப்பார்க்கிறதா உன்னையும்..
  • கனவெழுதி கரைந்து போகும்
  • கன்னங்கள் கோடாகும்
  • நினைவிருக்கா உனக்கும் கூட..
  • உன் இமைபிரியும் சத்தம் கூட
  • எழுப்பிவிடும் என்னை-என்
  • உயிர் பிரியும் வலி கூடவா
  • உணரவில்லை உனக்கு..?