Tuesday, July 15, 2014

 

 

மீசை முளைத்த கிளி

பெரியகோயிலுக்கு போகும் பாதை
பெரிய மீசையுடன் அந்த கிழவர்...
திறந்து தின்னக்கொடுத்தால்
முழுநெல்மணியொன்றை கொறித்து
ஏதாவதொரு சீட்டைஎடுத்து
எறிந்து உள்செல்லும் மெலிந்த கிளி...
முரண்டு பிடிப்பதாய் தோன்றும் போதெல்லாம்
கிழவர் பெரியமீசையை நீவிவிடுகிறார்...
கிளி வெட்டப்பட்ட சிறகை ஒடுக்கியபடி
பின்னால் நடந்தே கூண்டிற்குள் செல்கிறது
பொழுதுபோகாமல் கிளியை உற்றுநோக்கி
பெரியமீசையை நீவிவிடும் போதும்கூட
அது அச்சத்தில் நடுநடுங்கி 
சிறிது எச்சம் கூட விடுகிறது...
வாகனநெரிசல் மிகுந்த பொழுதொன்றில்
காக்கிஉடுப்பணிந்த 
மீசை அரும்பிவரும் இளம்பையனொருவன்
லத்தியுடன் நெருங்கி வருகையில்
திடீரென்று...
கூண்டிற்குள் நடுங்கும் கிளிக்கு
பெரிய மீசை முளைக்கிறது.....!


Saturday, July 12, 2014





வாரம் ஒருமுறை சவரம் செய்கையில்
உன்னை பார்க்க ஆரம்பித்தேன்...
இன்றோ..
நாளுக்கொருமுறை
சவரம் செய்ய வேண்டியுள்ளது..
அடிப்போடி...
மயிர் வளர்ந்த அளவிற்கு கூட
உனக்கு என்மேல்
காதல் வளரவில்லை..

Tuesday, July 1, 2014



ஏக்கம் வழியும் இரவுகள்




எனது நட்பே ...
எங்கிருக்கிறாய்
என்னுடன் நடந்து
எத்தனை தூரம் கடந்தாய்
பின் ஏன் இப்போதெல்லாம்
எங்கோ மறைந்துகொண்டு
என்னையே உற்றுநோக்குகிறாய் ...

உனது இடத்தை வேறு எவையோ
நிரப்புகின்றன ...
பூச்சாடியை குப்பைக் கூடையாய்
பயன்படுத்தும் பாபம் போல
நீ நிரம்பியிருந்த நிமிடங்களில்
வாழும் முறைகள் அடைத்து
வழிந்து ஓடுகிறது ... அருவருப்பாய் ...

கனவு நிரம்பியிருந்த என் காலப் பலூனில்
இப்போதெல்லாம்
நாட்காட்டி தாட்கள் மட்டுமே
ததும்பி வழிகின்றன ...!
வானம் வரை வளர்ந்திருந்த
வேட்கைத் தீ இப்போதெல்லாம்
அடுத்த வேளை சோறவிக்கும் அடுப்பிற்குள்
முணங்கித் திரிகிறது ...

வறுமை மறித்து நின்ற
வழியெல்லாம்
உன் கனவுத் திருக்கரத்தால்
கதவு திறக்க வைத்தாய் ...
பின் எப்படியோ நீ
பின்னடைந்து போனாய்
என்னை என் நடைமுறை சம்பிரதாயங்கள்
நெட்டித் தள்ளிப்போயின ...








திரும்பவும் சக்தியற்று
திசைகளின் வழியே திக்கித்திணறி
இதுமாதிரி இரவுகளில்
உன் அருகாமைக்காய் ஏங்கித்தவித்தபடி...
நடந்து கொண்டே இருக்கிறேன் ... நான் ...

என்னை எனக்கு மறந்து போகலாம்
என் நண்பா
என்னை உனக்கு ஞாபகமிருக்கிறதா ?
எனில்
என்னோடு வந்துவிடேன் ...
ஏனெனில்
என்னை எனக்கு தெரியாது
என்னை உனக்கு தெரியும் ....
தேடலில் தேம்பி பின் மனம் குலைந்து தேற்றி
விடியலின் வெளிச்ச மிகுதியில் மறந்து மனம் மாறி...
என்றேனும் இதுபோல தூக்கம் தொலைந்து
தேடும் நாளின் முன்பு நீயே வந்துவிடேன் ...
முன்புபோல ....


Friday, June 27, 2014

எல்லா வீட்டிலும்
செல்லம்மாக்கள் இருக்கிறார்கள்
பாரதி மட்டும்
ஏதாவது ஒரு வீட்டில்
எப்போதாவது தான்
தென்படுகிறான்...

Monday, June 23, 2014

அவன் நேராத் தான் நடக்குறான் ...
சற்றுமுன் பார்த்தேன் 
சாலையில் அவனை
பல வண்ணங்களில் அகலக்கரை போட்ட
பழுப்பேறிய லுங்கியும்
ஒருகாலத்தில் நீலமாயிருந்த 
கசங்கிய சட்டையும் உடுத்தி
முன்னும் பின்னும் அலைந்தபடி
 நடந்துக் கொண்டிருந்தான்...

பலநாட்கள் சவரமறியா முகம் தான்
எனினும்
அதன் சுவடே தெரியாமல் 
ஒரு 
மோகனப்புன்னகை
வெற்றிக்களையோடு அவன் முகத்தை 
வெளிச்சமாக்கியிருந்தது...

எதன்மீதும் கோபமற்று
எதையும் எதிர்கொள்ளும் திடத்துடன்
தவப்பலனாய் சித்திக்கும்
தெய்வீக சிரிப்பு அது...

அது சர்வநிச்சயமாய்
இந்த லோகத்து சிரிப்பல்ல...
முற்றிலும் வேறு உலகின் நிலையது..

அந்த சிரிப்பின் கவர்ச்சி
என்னையும் அந்த லோகத்திற்கு அழைத்தது...
என்ன...
`குடிச்சிட்டு தள்ளாடுறான் பாரு`
என்று
இந்த லோகத்து மனிதர்கள் சிரிப்பார்கள்
அர்த்தமற்று...





Tuesday, April 1, 2014



வெப்பம்

  


தீப்பெட்டி திறந்து அழுத்தி உரசி
வெளிவந்த வெளிச்சமுனையிடம் கேட்டேன்
“சிகரெட் தாயின் மூத்தமகனே ...
கொள்ளி வைக்க போகுமுன்
கொஞ்சம் நில்லேன்
இதுவரை எங்கிருந்தாய் நீ ?
அடங்கி கிடந்த பெட்டிக்குள்ளா ?
அழுத்தி உரசிய அட்டையிலா ?”


“முட்டாளே
உரச வந்த உன் கரங்களுக்குள் ...”
என்றபடி மூச்சைவிட்டது அது
இப்போது
என் விரல்களுக்குள் வெப்பத்தை உணர்கிறேன்

Wednesday, March 26, 2014



வலித்துணை



நான் வேறு திசையில் செல்லவேண்டியிருந்திருக்கலாம்...

அல்லது வேறு யாருடனும் பயணத்தை பகிர்ந்து கொள்ள 

இயலா மனச்சலிப்பில் இருந்திருக்கலாம்...

நிற்க நேரமற்று அவரைக் கடந்த நிமிடம் தாண்டியும்

வெகுநேரம் என்னுடன் பயணிக்கிறார்

நெடுஞ்சாலையொன்றில்

நல்ல வெயிலில் முகத்தில் வியர்வைவழிய 

லிப்ட் கேட்டு கை உயர்த்திய அந்த 

நடுத்தர வயதுக்காரர்....!