Saturday, March 12, 2011

மழை!

உயிர்களின் பசியடக்கும்
பயிர்களின் தாய்ப்பாலே..!

வானம் வழங்கிய அருட்கொடையே!
வறட்சி வென்றிடும் நீர்ப்படையே..!

எதிர்பார்ப்புகளற்ற காரியமாற்ற
எங்கள் உதாரணமே..!

மேகம் கிடுகிடுக்க மின்னல் ஒளிவிளக்காய்
வானம் விட்டு வரும் வசந்த பூ விதையே..!

ஆறுகள் பெருக்கெடுத்து
கடல் தோறும் கரை புரளும்
அலைகளின் பிறப்பிடமே..!

விதைகளை விருட்சமாக்கும்
விந்தை செய் விண்துளியே..!

கருணையின் வடிவமாய்
கசிந்துருகி வழியும் நீர்ச்சரமே..!

வறண்ட உலகைக் கண்டு
வானம் வடித்த கண்ணீரே..!

விதைத்து காத்திருக்கும்
விவசாயியின் வியர்வையை
அர்ச்சித்து தூவும்
அர்ச்சனை பூக்களே..!

நிலத்தில் நீ விழுந்தால்
நெல் முத்தாகிறாய்..
சிப்பிக்குள் நீ சிந்தினால்
நல்முத்தாகிறாய்..
முத்து முத்தாய் நீ முத்தமிட்டு தான்
மொத்த பூமியும் சுகப்படுகிறது..!

இயற்கைக்கு மாறாய் நீ
இந்த வருடம்
அதிகம் பொழிந்தாய் என
ஆனந்தப்பட்டோமே...
இப்போதல்லவா புரிகிறது-அது
ஆழிப்பேரலையால் அல்லல்படப்போகும்
மனிதகுலத்தை எண்ணி நீ
வடித கண்ணீர் என்று..!

நற்பெண்டிரின் நாக்குக்கு கட்டுப்படும் நாயகியே..!
வழங்கி வாழ்வளித்து
பொழியும் இடந்தோறும்
பொலிவை உண்டாக்கும்
தண்ணீர் குலத்தின் தலைமகளே..!

அழித்து அபகரித்து
ஆறாத்துயர் கூட்டும்
ஆழிப்பேரலையை-இனி
தண்ணீர் குலம் விட்டே
தள்ளி வைப்பாய் என் தாயே..!

பூமியின் அழுக்கினை
போக்கிட பொழிந்தாய்-இனி
மனிதரின் மன அழுக்கை
மாய்த்திட அவர்தம் மனதுக்குள் பொழி தாயே..!

அகிலத்தின் உயிர்ச்சத்தே..!
அனைத்துலகின் தத்துவமே..!
மகாசக்தி! தேவி ..!
மாரி உன்னை வணங்கி நின்றேன்
எங்கள் மனக்குறையை கேட்டருளாய்..

நீ வழங்கிய அருட்கொடையால்
நிறைந்துவரும் நதிப்போக்கை
நிறுத்தி அணை கண்டார்..
அந்த அணைகள் நிறைந்தழிந்து
தளும்பி சீற்றமுடன் தமிழகம்
தழுவும் வகையில் இனி
தாயே நீ பொழிக!
தமிழர் தாகம் தணித்திடுக..!

2 comments:

  1. கவிதை சொல்ல வந்த கருத்து நீர்த்து போகாமல் கொஞ்சம் சுருக்கிப் பாருங்களேன். தோழமையுடன்.

    ReplyDelete