Tuesday, July 1, 2014



ஏக்கம் வழியும் இரவுகள்




எனது நட்பே ...
எங்கிருக்கிறாய்
என்னுடன் நடந்து
எத்தனை தூரம் கடந்தாய்
பின் ஏன் இப்போதெல்லாம்
எங்கோ மறைந்துகொண்டு
என்னையே உற்றுநோக்குகிறாய் ...

உனது இடத்தை வேறு எவையோ
நிரப்புகின்றன ...
பூச்சாடியை குப்பைக் கூடையாய்
பயன்படுத்தும் பாபம் போல
நீ நிரம்பியிருந்த நிமிடங்களில்
வாழும் முறைகள் அடைத்து
வழிந்து ஓடுகிறது ... அருவருப்பாய் ...

கனவு நிரம்பியிருந்த என் காலப் பலூனில்
இப்போதெல்லாம்
நாட்காட்டி தாட்கள் மட்டுமே
ததும்பி வழிகின்றன ...!
வானம் வரை வளர்ந்திருந்த
வேட்கைத் தீ இப்போதெல்லாம்
அடுத்த வேளை சோறவிக்கும் அடுப்பிற்குள்
முணங்கித் திரிகிறது ...

வறுமை மறித்து நின்ற
வழியெல்லாம்
உன் கனவுத் திருக்கரத்தால்
கதவு திறக்க வைத்தாய் ...
பின் எப்படியோ நீ
பின்னடைந்து போனாய்
என்னை என் நடைமுறை சம்பிரதாயங்கள்
நெட்டித் தள்ளிப்போயின ...








திரும்பவும் சக்தியற்று
திசைகளின் வழியே திக்கித்திணறி
இதுமாதிரி இரவுகளில்
உன் அருகாமைக்காய் ஏங்கித்தவித்தபடி...
நடந்து கொண்டே இருக்கிறேன் ... நான் ...

என்னை எனக்கு மறந்து போகலாம்
என் நண்பா
என்னை உனக்கு ஞாபகமிருக்கிறதா ?
எனில்
என்னோடு வந்துவிடேன் ...
ஏனெனில்
என்னை எனக்கு தெரியாது
என்னை உனக்கு தெரியும் ....
தேடலில் தேம்பி பின் மனம் குலைந்து தேற்றி
விடியலின் வெளிச்ச மிகுதியில் மறந்து மனம் மாறி...
என்றேனும் இதுபோல தூக்கம் தொலைந்து
தேடும் நாளின் முன்பு நீயே வந்துவிடேன் ...
முன்புபோல ....


No comments:

Post a Comment