Thursday, January 20, 2011

மௌனம் என்ன மொழி?

அனைத்து நதிகளிலும்
அன்பே பிரவகிப்பதால்
மதங்களைக் கடப்பதைக் காட்டிலும்
மதங்களில் கரைவதன் மூலம்
மனிதத்தில் சங்கமிப்போம்
மகா சமுத்திரமாய் ஆர்ப்பரிப்போம் !


உணர்வுகளை சொல்லவல்ல
ஊடகமே மொழி !
மனங்களை இணைப்பதொன்றே
மகத்தான அதன் பணி !
ஊடகத்தின் பெயரால்-நமக்குள்
கோடுகிழிக்க வருவோரிடத்து
மௌனமாயிருங்கள்..-கேளுங்கள்
மௌனம் என்ன மொழி ?

வியர்வையாய் சிந்த வேதனைப்பட்டால்
கட்டாயம் ஒருநாளதை கண்ணீராய் சிந்தவேண்டிவரும்
என்பதாலேயே
வியர்வைக்கும் கண்ணீருக்கும் ஒரே சுவை..!
ஆகவே அருமை நண்பர்களே..
உழைத்தவன் கைகளில் உரிமைகள் தருவோம்
அவரை ஏய்த்து
பிழைப்பவர் செயலை பிழையென்றே கொல்வோம்..!

தீண்டிடில் தின்றிடும் தீயது சாதா தீ!
தீண்டாமை தின்றிடும் தீயெது சாதி!
தீண்டியும், தீண்டாதும்
திகுதிகுவென எரியும் தீ அது அறிவுத் தீ!
அக்கினிக் குஞ்சில் உயர்வெது தாழ்வெது?
அறிவுத்தீயில் முதலெது முடிவெது?
அறிவுத்தீயால் அழிப்போம் சாதியை..அது கொடியது..!

கனவுச்சுடரால் சமைப்போம் வழியை
அறிவுச்சிறகால் அளப்போம் வெளியை
பறப்போம் கலப்போம்
பள்ளம் மேடற்ற சமூகம் படைப்போம்..!

மத மொழியின வர்க்கபேதம் தகர்த்து
அனைவரும் சமமெனும்
ஆனந்த சமூகம் படைப்பது
மனிதரனைவரின் பொறுப்பு..!
ஏனெனில்..
சக மனிதரனைவரும்
சகோதரனே என்பதற்கு
சாட்சியாய் கிடக்கிறது
உனக்குள்ளே ஊறித் ததும்பி நிற்கும்
உதிரச் சிவப்பு..!




No comments:

Post a Comment