Friday, April 22, 2011

கிறுக்கு...

என்னைச் சுற்றி எல்லாமிருக்கிறது
எல்லாவற்றுகுள்ளும்
எனக்குகந்த நான் இருப்பதையே காண்கிறேன்...

உண்மையில்
எல்லாமென்பது இல்லை..
இல்லைகளுக்குள்ளும்
இருக்கும் என்னை
தேடியலையும் தேடுதலின்
மூச்சு வாங்குதலே
எல்லாமுமாக இருக்கிறது...

விரித்துவைத்த வெள்ளைதாளின் மீது
காற்றினால் அசைகிறது பேனா..
பின்
என் கையிலும் அசைகிறது-கற்பனையினால்...

காற்றினால் அசையும் அசைவை
ஏதாவதொரு கணத்தில்
என் கையிலும் கொண்டுவர முடிந்ததெனில்....
அற்புதம்...அற்புதம்...
நானும் காற்றும் கலந்தே எழுவோம்..
பாய்வோம்....

எழுத்துகளும், வரிகளுமற்ற
எங்கேயோ ஒளிந்துகொண்டுள்ளது
உண்மையான கவிதை...
அதை
வரிகளாலும் வார்த்தைகளாலும்
வருடி வருடி
அடையாளப்படுத்த விழையும்
அற்ப முயற்சிகளே
இதுவரை வெளிவந்த அனைத்து கவிதைகளும்..
இது உட்பட...

No comments:

Post a Comment