Friday, April 6, 2012

வாழ்க தினமணி!

எந்த அரசும் நூலகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்காது ,ஏனெனில் மக்கள் அதிகம் அறிந்து கொண்டால் அது தங்களது ஊழல் அதிகாரத்திற்கு ஆபத்து என்பதால்.ஆனால் ஊழலற்ற அரசை நடத்த முயற்சி செய்யும் எங்க அம்மாவின் பார்வைக்கு இந்த தலையங்கம் வர நேர்ந்தால் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு நூலகம் செழிக்க வழியுண்டு.எப்படியிருப்பினும் வாழ்க தினமணி!

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு அண்மையில் ஆங்கில நாளிதழ்களின் கோபத்துக்கு ஆளானது. காரணம், அரசு மற்றும் அரசு நிதியுதவியில் நடைபெறும் நூலகங்களுக்கு வாங்க வேண்டிய பத்திரிகைகள் என்று 8 பத்திரிகைகளை மட்டுமே அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டது. 5 வங்காளி, 1 ஹிந்தி, 2 உருது நாளிதழ்கள் இடம் பெற்ற இப்பட்டியலில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுகூட இடம் பெறவில்லை.
இந்தியா முழுவதிலும் இதற்கு ஆங்கில ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் உள்பட மேலும் நான்கு உள்ளூர் நாளிதழ்களையும் பட்டியலில் சேர்த்துப் புதிதாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் இருக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் ஒன்றும் உண்டு. அதை ஆங்கிலப் பத்திரிகைகள் ஏனோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது என்னவென்றால், அரசியல் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகைகளாகவோ, தங்களது அரசியல் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்து நடைபெறும் நாளிதழ் மற்றும் பத்திரிகைகளை அரசுப் பணத்தில் நூலகத்துக்கு வாங்கக்கூடாது என்பதுதான். இதில் மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகைகளும் அடங்கும். இதைவிட மோசமான சர்வாதிகாரப் போக்கு வேறொன்று இருக்க முடியாது என்று கோபத்துடன் பேசியிருக்கிறார் சீதாராம் யெச்சூரி.
இதில் வேடிக்கை என்னவென்றால், மேற்கு வங்க அரசு அனுமதித்துள்ள முதல்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சம்பாத் பிரதிதின், சன்மார்க், அக்பர்-இ-மாஷிக் ஆகிய மூன்று பத்திரிகைகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இவர்கள் சார்ந்துள்ள பத்திரிகைகளை அரசியல் பத்திரிகை என்பதா, நடுநிலை நாளிதழ் என்பதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
மேலும் 5 பத்திரிகைகளைச் சேர்த்து ஆணை வெளியிட்ட அத்துறையின் அமைச்சர், அனைத்துப் பத்திரிகைகளையும் வாங்குவதற்கு நூலகத் துறையிடம் போதிய நிதிவசதி இல்லை. இப்போது நிறைய பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எல்லா நாளிதழ்களையும் வாங்குவது சாத்தியமா? என்று கேட்டுள்ளார். இது முழுக்க முழுக்க உண்மை. இதற்குக் காரணம் நூலகத்துறைக்குப் போதுமான நிதி அளிக்கப்படுவது இல்லை என்பதை மறுக்க இயலாது.
இந்தச் சிக்கல் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் உள்ளது. உள்ளாட்சிகள் வசூலிக்கும் சொத்து வரியில் 10 விழுக்காடு நூலக வரியாக நூலக ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், எந்த உள்ளாட்சி அமைப்புகளும் இதைச் செய்வதே இல்லை. தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம். 2010 மார்ச் மாதம் வரை நூலக ஆணையத்துக்கு உள்ளாட்சிகள் அளிக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.116 கோடி. இதில் மாநகராட்சிகள் மட்டும் சுமார் ரூ. 22 கோடி செலுத்த வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ரூ. 80 கோடிக்குப் புத்தகம் வாங்கியபோது, நூலக ஆணையத்திடம் பணம் இல்லை. சிறப்பு நேர்வாக ரூ. 50 கோடியை நிதித்துறையிடம் பெற்று, பதிப்பகங்களுக்கு வழங்கினார்கள். ஆனால், இதே நடவடிக்கையை எல்லா நூலகங்களின் புத்தகக் கொள்முதலுக்கும் செய்ய முடியாது.
நூலகங்களின் இந்த நிலைமைக்கு வெறும் நிதிப் பற்றாக்குறை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. நூலகங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் பிடியிலேயே இருக்கின்றன. நூலக ஆணைக் குழுவில் அரசுக்கு வேண்டியவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். நிதிநெருக்கடியில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கும்போது எந்த அளவுக்குக் கவனமாகவும், தரமான புத்தகங்களையும் வாங்க வேண்டும் என்கிற அக்கறையே இல்லாமல்தான் அவர்கள் புத்தகங்களை வாங்குகிறார்கள்.
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அதிக விற்பனையான புத்தகங்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தால், அதில் 10 விழுக்காடு புத்தகங்கள் கூட, நூலகத்துக்கான கொள்முதல் பட்டியலில் இருக்காது. ஏனென்றால், நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் பெரும்பாலும், ஆளும்கட்சியின் துதிபாடிகள் எழுதிய, யாராலும் பேசப்படாத, எவராலும் படிக்கப்படாத நூல்கள்தான். குறிப்பிட்ட சில பதிப்பகங்களும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களது புத்தகங்களை நூலகத்துறை வாங்கும்படி பார்த்துக் கொண்டுவிடுகிறார்கள். ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை போன்ற சில அமைப்புகள் மூலம்தான் தரமான புத்தகங்கள் நூலகத்துறைக்கு வந்து சேர்கின்றன.
வெளிநாடுகளில் உள்ள நூலகங்களில், வாசகர்கள் தங்களுக்கு வேண்டும் என்கிற, அல்லது சிறந்த நூல் என்று அறியவந்த விமர்சனங்களைக் குறிப்பிட்டு, அவற்றை வாங்கி வைக்கப் பரிந்துரைப் பட்டியலில் எழுதுகிறார்கள். அந்த நூலகங்கள் வாசகர்களின் கருத்துக்கு மதிப்புத் தந்து அந்த புத்தகங்களை வாங்கி வைக்கின்றன.
புத்தகங்களையும் நாளிதழ்களையும் பத்திரிகைகளையும் அரசு அதிகாரிகளும் அரசு நியமனம் செய்யும் குழுவும் தேர்வு செய்யும்வரை, நூலகங்கள் தரம் குறைந்த புத்தகங்களின் புகலிடமாகத்தான் தொடரும். நிதிப் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், இருக்கின்ற குறைந்த நிதியையும் இப்படி வீண்படுத்துவதுதான் இன்றைய நூலகத்தின் மிகப்பெரும் அவலமாக இருக்கிறது.
குறைந்தபட்சம், அரசியல் கட்சிகளின் அதிகாரபூர்வ நாளேடுகள் அரசு மற்றும் பொது நூலகங்களில் இடம் பெறக்கூடாது என்கிற வரைமுறை பின்பற்றப்படுவதுதான் ஓரளவுக்காவது நடுநிலை நாளேடுகள் நூலகங்களில் இடம்பெறவும், மக்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் வழிகோலும். கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி, தங்களது கட்சிக்காக ஒரு நாளிதழைத் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.
தெற்கோ, வடக்கோ, மேற்கோ, கிழக்கோ இந்தியாவைப் பொருத்தவரை அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது, வேறென்ன?

No comments:

Post a Comment